தண்ணீர் இன்றி கருகும் கரும்பு பயிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

லளிகம் பகுதியில் தண்ணீர் இன்றி கரும்பு பயிர்கள் கருகி வருகிறது. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-09-12 23:00 GMT
நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அருகே உள்ள லளிகம், மிட்டாதின்னஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி ஆகிய கிராம ஊராட்சிக்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவ மழை மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி, விவசாயிகள் பல ஏக்கரில் கரும்பு பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததன் காரணமாக நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன.

மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. இதனால் விவசாய கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டன. இதன் காரணமாக கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தற்போது கரும்பு பயிர்கள் கருகி வருகின்றன. சில விவசாயிகள் நீரை விலைகொடுத்து வாங்கி டிராக்டர் மூலம் கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி பயிரிட்டுள்ள கரும்புகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் கருகிய கரும்பு பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்