ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2018-09-12 21:45 GMT
புதுக்கோட்டை, 


பெட்ரோல், டீசல் உற்பத்தி செலவு என்பது ரூ.28 தான். ஆனால் அதற்கு மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரியால் தான் பெட்ரோல் ரூ.84-க்கும், டீசல் ரூ.76-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் ஒருவருக்கு ஒருவர் குறை கூறிக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
ஆனால், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் கேட்பது ஊக்கத்தொகை அல்ல, பணி நிரந்தரம். எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

காவிரியில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் போய் சேராததால் நேரடி விதைப்பின் மூலம் பயிர் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது கருகி வருகிறது. எனவே கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதற்கும், கூட்டுறவு வங்கிகள் மூலம் அவர்களுக்கு கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குட்கா ஊழல் வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசை அச்சுறுத்தவே சி.பி.ஐ சோதனை செய்யப்பட்டு உள்ளதோ என்று நினைக்க தோன்றுகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்தும் கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசின், ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் மோடி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்