எட்டயபுரத்தில் பாரதியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை வேடம் அணிந்து மாணவ-மாணவிகள் ஊர்வலம்

நினைவு நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாரதியார் வேடம் அணிந்து மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2018-09-12 22:00 GMT
எட்டயபுரம், 

நினைவு நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாரதியார் வேடம் அணிந்து மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

பாரதியார் நினைவு தினம்

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய நாட்டின் விடுதலைக்காக, தனது உணர்ச்சிமிகு கவிதைகளால் மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவரது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி அவர் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள், பாரதியார் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எட்டயபுரம் தாசில்தார் வதனாள், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேடம் அணிந்த மாணவ-மாணவிகள்

எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 97 பேர் பாரதியாரின் வேடம் அணிந்து, பாரதியார் மணிமண்டபத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், பாரதியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் அவர்கள், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்தவும், தேச பக்தியை வளர்க்கவும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அவர்கள், பாரதியாரின் பாடல்களை பாடியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பாரதியார் பிறந்த இல்லத்துக்கு சென்றனர். அங்குள்ள பாரதியாரின் மார்பளவு சிலைக்கு மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பரிசளிப்பு

பாரதியார் வேடம் அணிந்த மாணவ-மாணவிகளுக்கு ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுனர் சின்னத்துரை அப்துல்லா பரிசுகளை வழங்கினார். பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

ரோட்டரி சங்க தலைவர் பாபு, துணை தலைவர் நாராயணசாமி, செயலாளர் ரவி மாணிக்கம், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், வர்த்தக சங்க தலைவர் ராஜா, பாரதி ஆய்வாளர்கள் பொன் பரமானந்தம், இளசை மணியன், தலைமை ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ரெஜினால்டு சேவியர், செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்