மாவட்டம் முழுவதும் 656 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி

மாவட்டம் முழுவதும் 656 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-12 22:02 GMT
தேனி,

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்படும். பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் பிரதிஷ்டை செய்து ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு சிலைகள் வைப்பதற்கு முன்அனுமதி பெறுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறாத இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 730 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் விண்ணப்பித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் 656 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தாமதமாக விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்பிக்காத காரணங்களால் மற்ற இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

3 நாட்கள் ஊர்வலம்

இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்வதற்காக, தேனி பொம்மயகவுண்டன்பட்டி பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் சிலைகள் எடுத்து செல்லப்பட்டன. நேற்று இரவே பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன. மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று முதல் நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3 நாட்கள் நடக்கின்றன.

சிலைகள் மற்றும் ஊர்வலத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலைக்கும் தலா ஒரு போலீஸ்காரர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், சிலைகள் வைக்கும் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் சிலை பாதுகாப்பு குழுக்கள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லும் போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது. இன்று பெரியகுளத்தில் ஊர்வலம் நடக்கிறது. அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் 2 பேர் தலைமையில், 5 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்