தினம் ஒரு தகவல் : ‘பூநாரை ஏரி’

பழவேற்காடு ஏரி இந்தியாவின் 2-வது பெரிய உவர் நீர்நிலையாக விளங்கி வருகிறது. அத்துடன் நன்னீர், உப்பு நீர், குட்டைகள், சேற்றுத் திட்டுகள், வயல்வெளிகள் போன்ற பல்வேறு சூழல் தொகுதிகளை உள்ளடக்கி இருப்பதால், இங்குப் பல்லுயிர்கள் செழித்து வளர்கின்றன.

Update: 2018-09-13 05:47 GMT
 தமிழ்நாடு, ஆந்திர மாநிலத்தில் பரவி இருக்கும் இந்த ஏரி பல ஆயிரக்கணக்கான பறவைகளின் புகலிடமாக உள்ளது.

ஏரியின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளதால், இங்கு காணப்படும் பறவைகளும் மாறுபடுகின்றன. ஆரம்பாக்கம் பகுதியில் நீர் குறைவாகவும், சேற்றுத் திட்டுகள் அதிகமாகவும் உள்ளதால், உள்ளான், உப்புக்கொத்தி பறவைகள் அதிகம் காணப்படுகின்றன. இங்கு வரும் முக்கிய பறவை இனம் பட்டைத்தலை வாத்து.

இது இமயமலை தொடரை தாண்டி பறந்து தென்னிந்தியாவை வந்தடையும் வலசை பறவை. இதே போல் பல பறவை இனங்கள் இங்கு வந்தாலும்கூட, பழவேற்காட்டை பூநாரை தேசம் என்றே சொல்லலாம்.

பூநாரைகள் சிறியதாகவோ, பெரிய கூட்டமாகவோ தங்கள் உயரமான இளஞ்சிவப்பு கால்களைக் கொண்டு நீரில் நடப்பது, நீண்ட அலகை நீரில் துளாவியபடி உணவை உண்பது, நாம் படகில் சென்றாலும் நமக்கும் அவற்றுக்கும் இடையிலான இடைவெளி குறையாமல் நகர்ந்து சென்று கொண்டே இருப்பதை பார்ப்பது போன்றவை அற்புதமான அனுபவம். அவை பறக்கும் போது வெளித்தெரியும் சிவந்த இறகுகள், அவற்றின் அழகுக்கு மகுடம் வைத்தது போலிருக்கும்.

சில நேரங்களில் ஆயிரக்கணக்கான பூநாரைகள் பழவேற் காட்டில் கூடுகின்றன. பெரிய பூநாரைகளுடன், சாம்பல் பழுப்புநிற குஞ்சுகள் இருப்பதையும் காணலாம்.

பழவேற்காட்டில் மனிதர்கள் செல்ல முடியாத ஒரு பகுதியில் பூநாரைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கக்கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வெயில் காலம் தொடங்கும் சமயத்தில் வலசை பறவைகள் பழவேற்காடு ஏரியை விட்டு பூர்வீக இடத்துக்கு திரும்பிவிட்டாலும், பூநாரைகள் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும்.

இயற்கையாகவே வடக்கு பகுதியில் (ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டா) பூமிக்கு அடியில் உள்ள கண்டத்தட்டுகள் மேலே எழுந்துவருவதால், அங்குள்ள நீர் வேகமாக தெற்கு நோக்கிச் செல்கிறது. இதனால் வண்டல் படிவு அதிகமாகி ஆற்று முகத்துவாரத்தை மூடுகிறது. இதனால் கடல் நீரும், நன்னீரும் கலப்பதால் உருவாகக்கூடிய ஆற்று முகத்துவாரத்தின் சுற்றுச்சூழலில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் முகத்துவாரத்தை சார்ந்த உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு முகத்துவாரத்தில் சேரும் வண்டல் படிவை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் வலுத்து வருகிறது. 

மேலும் செய்திகள்