தென் மாவட்டங்களுக்கு மணல் கடத்தல் மேலும் 5 பேர் கைது; 4 லாரிகள் பறிமுதல்

திருச்சி அருகே கோரையாற்றில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மணல் கடத்திய மேலும் 5 பேர் கைதானார்கள். 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-09-13 22:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம் எல்லை முடிவில் புதுக்கோட்டை மாவட்டம் எல்லையான மாத்தூர் உள்ளது. மாத்தூர் அருகே மதயானைப்பட்டி கலியமங்கலம் பகுதியில் கோரையாறு உள்ளது. கோரையாற்றில் இரவு நேரங்களில் மணல் ஏற்றி லாரிகளில் கடத்தப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட கோட்டாட்சியர் ஜெயபாரதிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் சோதனை நடத்தியதில் மணல் கடத்தியதாக ஒரு லாரியை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர், கிளனர்களான கன்னியாகுமரியை சேர்ந்த சேகர்(வயது 45), மனோகரன்(36), மகேஷ்(44) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி உரிமையாளர் கன்னியாகுமரியை சேர்ந்த சசி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கோட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் மதயானைப்பட்டி பிரிவு சாலையில் வந்த லாரி மற்றும் டாரஸ் லாரிகளை கண்காணித்தனர். அப்போது 4 லாரிகள் கோரையாற்றில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு, லாரிகளை தார்பாய் போட்டு மூடியபடி வந்தது. அந்த லாரிகளை மடக்கி வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

அவற்றில் 3 டாரஸ் லாரி, 1 டிப்பர் லாரி ஆகும். ஒவ்வொரு லாரியிலும் தலா 6 யூனிட்டுக்கு மேல் மணல் இருந்தது. லாரியை ஓட்டி வந்த டிரைவர்களிடம், மணல் அள்ளிச்செல்வதற்கான எவ்வித ஆவணமும் இல்லை. விசாரணையில் அவர்கள் அந்த மணல் லாரிகளை தென்மாவட்டங்களான விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு ஓட்டிச்செல்வதாக தெரிவித்தனர். மேலும் அங்கு மணலை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கில் இந்த கடத்தலில் ஈடுபட்டதாகவும் கூறினர். அதைத்தொடர்ந்து கோரையாற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தியதாக 4 லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர்கள், கிளனர்கள் என சிவகாசியை சேர்ந்த முருகன் (42), விருதுநகரை சேர்ந்த கணேசன்(38), கரூரை சேர்ந்த பெருமாள்(44), விருதுநகரை சேர்ந்த விக்னேஷ்(22), திருச்சியை சேர்ந்த தனபால்(26), ஆகிய 5 பேரை மாத்தூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் திருட்டுத்தனமாக திருச்சி காவிரி, கொள்ளிடம் மற்றும் கோரையாறு பகுதிகளில் லாரிகளில் இரவு வேளையில் மணல் அள்ளி கடத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே திருச்சி திருவளர்ச்சோலை பகுதியில் போலீசார் துணையுடன் பெங்களூருக்கு மணல் கடத்தியதாக லாரிகளுடன் 3 பேர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் திருவானைக்காவல் பகுதியில் மணல் கடத்தி சென்ற 2 டாரஸ் லாரிகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.

மேலும் செய்திகள்