சென்னை கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் கருவி கிரேன் உதவியுடன் பொருத்தப்பட்டது

சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்த ரேடார் கருவி பழுதடைந்தது. இதனையடுத்து அதனை அகற்றிவிட்டு, புதிய ரேடார் கருவி கிரேன் உதவியுடன் நேற்று பொருத்தப்பட்டது.

Update: 2018-09-13 23:00 GMT
சென்னை, 

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடல் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கவும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் கலங்கரை விளக்கங்கள் மற்றும் முக்கிய கோபுரங்களில் ரேடார் கருவி அமைக்கப்பட்டன.

அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் சக்தி வாய்ந்த ரேடார் கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டன. இதன் மூலம் சென்னைக்கு வந்து செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. ரேடார் கருவி ஸ்கேன் செய்யும் பணிகளையும், கேமரா புகைப்படம் எடுக்கும் பணியையும் மேற்கொண்டது.

இதற்காக கலங்கரை விளக்கத்தின் 11-வது மாடியில் ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கதிர்வீச்சு தாக்கம் காரணமாக 10-வது மாடி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ரேடார் கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரேடாரின் ஸ்கேன் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை, கலங்கரை விளக்க அதிகாரிகள் உடனுக்குடன் கடலோர காவல்படைக்கு அனுப்பிவைக்கின்றனர்.

இந்தநிலையில் சக்திவாய்ந்த அந்த ரேடார் கருவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதானது. அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ரேடாரை பரிசோதித்து பார்த்தனர். ஆனாலும் அதில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் கடற்கரைக்கு வரும் படகுகள் மற்றும் கப்பல்கள் குறித்த தகவல்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ரேடார் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பெங்களூருவில் இருந்து புதிய ரேடார் கருவி நேற்று காலை கலங்கரை விளக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. கலங்கரை விளக்கம் பின்னால் உள்ள சர்வீஸ் சாலையில் அது பத்திரமாக வைக்கப்பட்டது. பின்னர் 60 மீட்டர் உயரம் கொண்ட கிரேன் எந்திரம் கொண்டுவரப்பட்டு, காலை 11 மணியளவில் தொழில்நுட்ப குழுவினர் கலங்கரை விளக்கத்தில் ரேடார் கருவியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு பழுதான ரேடார் கருவி அகற்றப்பட்டு, கிரேன் உதவியுடன் பத்திரமாக கீழே இறக்கப்பட்டது. பின்னர் புதிய ரேடார் கருவி கிரேன் எந்திரம் மூலம் மேலே கொண்டு செல்லப்பட்டு கலங்கரை விளக்கத்தின் உச்சியில் பொருத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அரை மணி நேரம் கழித்து புதிய ரேடார் கருவி சோதித்து பார்க்கப்பட்டது. பின்னர் புதிய ரேடார் கருவி செயல்பட தொடங்கியது.

புதிய ரேடார் கருவி பொருத்தும் பணி நடந்ததால், நேற்று கலங்கரை விளக்கத்துக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் புதிய ரேடார் கருவி பொருத்தும் பணி நடைபெற்ற சமயத்தில் கடற்கரை ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில். “புதிய ரேடார் கருவியின் செயல்பாடு 48 மணி நேரம் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட இருக்கிறது. அதன் பணிகள் குறித்து கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புதிய ரேடார் கருவி இம்மாத இறுதியில் மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளது”, என்றனர்.

மேலும் செய்திகள்