விநாயகர் சிலை வைக்கப்பட்ட பந்தலுக்குள் சரக்கு ஆட்டோ புகுந்தது

பொள்ளாச்சி அருகே கரட்டுபாளையத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பந்தலுக்குள் சரக்கு ஆட்டோ புகுந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-09-13 21:30 GMT
கோட்டூர்,


விநாயகர் சதுர்த்தியையொட்டி பொள்ளாச்சி அருகே கரட்டுபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு மட்டும் சிமெண்டால் ஆன மேற்கூரையால் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் காலை முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனால் அங்கு பக்தர்கள் வந்து வழிபட்டு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாலை 5 மணிக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்று, விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த பந்தலுக்குள் புகுந்தது. இதில் பந்தல் சரிந்து விழுந்து சேதம் அடைந்தது. அப்போது பந்தல் மற்றும் அந்த பகுதியில் நின்றிருந்த குழந்தைகள், பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அய்யோ, அம்மா என்று கூச்சலிட்டனர். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து அக்கம், பக்கத்தினர் உடனே அங்கு சென்று, சரக்கு ஆட்டோவை பின்னோக்கி எடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஆம்புலன்சு வாகனங்கள் மூலம் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் தர்ஷினி (வயது 12), பவித்ரா (16), நர்மதா (18), காமாட்சி (35), அருணா (17), சரோஜினி (34), ரேவதி (34), திரேசா (27), கோகுல்பிரவீன் (5), மகாலட்சுமி (28), பாலு (40), கீதா (7), லோகநாயகி (45), செந்தில்குமார் (13), அனன்யா (17) ஆகிய 15 பேர் படுகாயமடைந்தனர்.

இதில் அருணா, தர்ஷினி, கோகுல் பிரவீன் ஆகியோர் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கரட்டுபாளையத்தை சேர்ந்த பாலு என்பவர் குடிபோதையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் பாலுவை வலைவீசி தேடி வரு கின்றனர். 

மேலும் செய்திகள்