அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

சதுர்த்தியையொட்டி அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது.

Update: 2018-09-13 22:53 GMT
அரியலூர்,

விநாயகர் சதுர்த்தியை யொட்டி அரியலூர் எம்.பி கோவில் தெரு, பெரிய கடை தெரு, பட்டுநூல்கார தெரு, பெரிய அரண்மனை தெரு ஆகிய இடங்களில் பல்வேறு வடிவங்களான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விழாக்குழுவினர் சார்பில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அரியலூர் சின்ன கடை தெருவில் உள்ள அனைத்து வியாபாரிகள் சார்பில், அங்கு 5 முக கொண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொன்னுசாமி அரண்மனை தெருவில் விநாயகர் தனது தம்பி முருகனுடன் காட்சியளிக்கும் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. மேலும் அரியலூர் நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அரியலூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தின் செல்வ கணபதி கோவிலில் உள்ள விநாயகர் சிலைக்கு 80 கிலோவில் தயாரிக்கப்பட்ட வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் போலீசார் அனுமதியுடன் விழாக்குழுவினர் சார்பில் மொத்தம் 137 விநாயகர் சிலைகள் நேற்று வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகள் முடிந்து அரியலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மருதையாற்றிலும், திருமானூர் சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், ஜெயங்கொண்டம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், அணைக்கரையை சுற்றியுள்ள இடங்களில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன.

மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள கணக்க விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் மீன்சுருட்டியில் உள்ள செல்ல விநாயகர், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விளந்தை-ஆண்டிமடம் ஸ்ரீ மேல அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்தல விநாயகருக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. இதில் ஆண்டிமடம், விளந்தை உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆண்டிமடம் செல்வ விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சந்தகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் வெற்றி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் கடை வீதியில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை உருவாக்கி அதற்கு வர்ணம் பூசி தொழிலாளர்கள் விற்பனை செய்தனர். இதனை பொதுமக்கள் வாங்கி வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டில் விநாயகருக்கு பூக்களால் அலங்காரம் செய்து, கொழுக்கட்டை, பொங்கல் வைத்து படைத்து வழிபட்டனர். இதேபோல் ஜெயங்கொண்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்