விநாயகர் சதுர்த்தியையொட்டி தஞ்சை பெரியகோவில் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி தஞ்சை பெரியகோவில் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் 200 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

Update: 2018-09-13 23:10 GMT
தஞ்சாவூர்,


விநாயகர் சதுர்த்திவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சையில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தஞ்சை கீழவாசலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோவில், திலகர் திடல் அருகே உள்ள தொப்புள்பிள்ளையார் கோவில், மானம்புச்சாவடியில் உள்ள மும்மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகபிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் வளாகத்திலும் விநாயகர் சன்னதி உள்ளது. இங்கு விநாயகர் தனி சன்னதியில் 6 அடி உயரத்தில் பிரமாண்ட தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மராட்டிய மன்னர் சரபோஜி காலத்தில் இந்த விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டது. அவருடைய ஆட்சிக்காலத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது.

பின்னர் அவருடைய காலத்திற்கு பிறகு சிறப்பு வழிபாடுகள் மட்டுமே நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரம் எதுவும் நடைபெறவில்லை. தற்போது 200 ஆண்டுகளுக்கு பிறகு பெரியகோவிலில் உள்ள விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நேற்று நடைபெற்றது. 25 கிலோ சந்தனத்தை கொண்டு விநாயகருக்கு இந்த அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி போன்றவை வைத்து படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டனர். மேலும் நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. 

மேலும் செய்திகள்