ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மனைவியிடம் 15 பவுன் நகை பறிப்பு

சிதம்பரத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மனைவியிடம் 15 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-09-13 22:30 GMT
சிதம்பரம், 


சிதம்பரம் முருகன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 80). ஓய்வுபெற்ற கால்நடை விரிவாக்க அலுவலர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி சாந்தாவுடன்(74) ஒரு ஸ்கூட்டரில் சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவில் நிகழ்ந்த புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்ள சென்றார். விழா முடிந்ததும் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் அங்கிருந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டனர். முருகன்பிள்ளை தெரு சந்திப்பு வந்தபோது, ராஜகோபால் ஸ்கூட்டரை நிறுத்தி, தனது மனைவியை வீட்டுக்கு நடந்து செல்லுமாறும், தான் அருகில் உள்ள கடையில் பால் பாக்கெட் வாங்கி வருவதாகவும் கூறிச் சென்றார்.

சாந்தா மட்டும் தனியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ‘ஹெல்மெட்’ அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், கண்இமைக்கும் நேரத்தில் சாந்தாவின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தா திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி சென்ற மர்மநபரை பிடிக்க விரைந்து சென்றனர். அதற்குள் அந்த நபர் தலைமறைவாகி விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3½ லட்சம் ஆகும்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நகையை பறிகொடுத்த சாந்தா மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கணவன்-மனைவி ஸ்கூட்டரில் வந்ததை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து தனியாக வீட்டுக்கு நடந்து சென்ற சாந்தாவிடம் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிதம்பரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்