விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2018-09-14 01:06 GMT
புதுச்சேரி,

விநாயகர் சதுர்த்தி விழா புதுவையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையிலேயே பொதுமக்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்த விநாயகர் வழிபாடு நடத்தினர். புதுவை கொசக்கடை வீதி, முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம் உள்பட பல்வேறு இடங்களில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன. இதனை பொதுமக்கள் வாங்கி தங்கள் வீடுகளில் வைத்து, பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து பலர் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர். இதற்காக மணக்குள விநாயகர் கோவில் அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும் மணக்குள விநாயகருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தரிசனம் செய்தனர். விநாயகரை தரிசித்த பக்தர்களுக்கு இடைவிடாது பிரசாதங்களும் வழங்கப்பட்டன. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டனர்.

மணக்குள விநாயகர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு இருந்தது. அங்கு கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இதேபோல் புதுவை நகரப்பகுதிகளில் உள்ள கோவில்களில் உள்ள விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களும் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகள்