பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டம்

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-14 22:45 GMT

புதுச்சேரி,

புதுவையில் பாதாள சாக்கடைக்காக பைப்புகள் பதிக்கப்பட்டு அதற்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதற்கு பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டணம் வசூலிப்பதை கண்டித்து நேற்று புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலகத்துக்கு வந்த பாரதீய ஜனதா கட்சியினர் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், நகர மாவட்ட தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போராட்டம் குறித்து மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவையில் 30 வருடமாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு வரி போட்டதேயில்லை. ஆனால் இப்போது ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரை வரி போடுகின்றனர். இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் வசூலிக்கின்றனர்.

இதுதவிர மின்சார வரி, வீட்டுவரி, தண்ணீர் வரியையும் உயர்த்திவிட்டனர். இதனால் மக்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி வரியாகவே சென்றுவிடுகிறது. இந்த அரசு போடும் வரியை தாங்க முடியாமல் பலர் தமிழக பகுதிக்கு சென்றுவிட்டனர். எனவே தற்போது விதிக்கப்படும் வரிகளை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்