மதுரை விமான நிலையத்தில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல், 5 பேரிடம் விசாரணை

மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-09-14 23:00 GMT

மதுரை,

மதுரையில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வு துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, மதுரையை சேர்ந்த சன்னாசி என்பவருடைய மகன்கள் திருநாவுக்கரசு (வயது 40), மணிவண்ணன் (35), கரிகாலன் (36), அப்துல்ஜலால் மகன் சையத்முகமது (34), முகமது முகைதீன் மகன் ஜாவகீர் (32) ஆகிய 5 பேர் அங்கு வந்தனர்.

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவை அனைத்தும் மதுரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றதும் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சுங்க புலனாய்வு துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு கூறும்போது, “வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற 5 பேரிடம் இருந்தும் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், இந்திய மதிப்பில் ரூ.17 லட்சத்து 16 ஆயிரத்து 802 ஆகும். மேலும் அந்த பணம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது, யாருக்கு அவர்கள் கொண்டு செல்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம், என்றார்.

பொதுவாக வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள், தங்களின் தேவைக்கு பயன்படுத்தி கொள்ள சுமார் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (அதாவது இந்திய மதிப்பில் ரூ.3½ லட்சம்) வெளிநாட்டு பணத்தை எடுத்துச் செல்ல முடியும். மேலும் அந்த பணத்தை ரிசர்வ் வங்கியின் மூலமோ அல்லது அதனை சார்ந்த நிறுவனங்களின் மூலமோ பெற்றிருப்பது அவசியமாகும். அவ்வாறு பணத்தை விமானத்தில் எடுத்து செல்லும் போது அந்த பணத்திற்கான ரசீதையும் கையில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அந்த பணத்தை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும். அனுமதி இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் ஹவாலா பணம் என அழைக்கப்படுகிறது. இதுபோன்ற ஹவாலா பணம் கடத்தப்படுவதால் இந்தியாவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்