விநாயகர் சிலைகள் ஊர்வலம் கன்னியாகுமரி கடலில் கரைப்பு

சிவசேனா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டன.

Update: 2018-09-14 22:30 GMT
நாகர்கோவில்,

நாடு முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா குமரி மாவட்டத்திலும் கோலாகலமாக நடந்தது. ஆண்டுதோறும் குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு, பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவான நேற்று முன்தினம் இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று சிவசேனா சார்பில் சிலை கரைப்பு ஊர்வலம் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு நடைபெற்றது. இதையொட்டி குமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட்டு இருந்த 60 விநாயகர் சிலைகள் வேன், கார், டெம்போ, லாரி, மினி டெம்போ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்டன.

சிலைகள் ஒவ்வொன்றும் 2 அடி முதல் 7½ அடி வரை உயரம் இருந்தன. இதில் விநாயகர் மேலே வெங்கடாஜலபதி இருப்பது போன்ற திருப்பதி விநாயகர் சிலையும் இடம் பெற்றிருந்தது.

மாலை 3 மணி அளவில் விநாயகர் சிலை ஊர்வலம் நாகராஜா கோவிலில் இருந்து தொடங்கியது. ஊர்வல தொடக்க நிகழ்ச்சிக்கு சிவசேனா மாவட்ட தலைவர் ஏ.பி.ராஜன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை அழகி எம்.விஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், துணைத்தலைவர்கள் ஸ்ரீகுமாரன் தம்பி, ஜெகதேவ், மாவட்ட செயலாளர்கள் ஜெயமனோகர், ஜெயராஜன், பொருளாளர் அர்ஜுனன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் மணிமேடை சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தை சென்றடைந்தது. அங்கு கன்னியாகுமரி நகர சிவசேனா தலைவர் சுபாஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் வாகனங்களில் இருந்து இறங்கி மேள, தாளங்கள் முழங்க அங்கிருந்து கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் வரை ஊர்வலமாக நடந்து சென்றனர்.

ஊர்வலம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை மாலை 5 மணிக்கு வந்தடைந்தது. அங்கு 73 விநாயகர் சிலைகள் வரிசையாக வைக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பிறகு 6 மணிக்கு ஒவ்வொரு சிலையாக கடலில் கரைக்கப்பட்டது.

அப்போது, தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில், கூடுதல் சூப்பிரண்டுகள் ஸ்டான்லி ஜோன்ஸ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில், துணை சூப்பிரண்டுகள் இளங்கோவன் (நாகர்கோவில்), முத்துபாண்டியன் (கன்னியாகுமரி) மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு சிவசேனா சார்பில் மாவட்டம் முழுவதும் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேல்புறம் அளப்பன்கோடு ஈஸ்வரகால பூதத்தான் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக குழித்துறை வாவுபலி திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்துக்கு தமிழ்நாடு சிவசேனா மாநில தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பா.ம.க.மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அரிகரன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அனைத்து சிலைகளும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்