பாலக்கோடு, தேவரசம்பட்டியில் 1,480 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

பாலக்கோடு, தேவரசம்பட்டியில் 1,480 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீர்வரிசை பொருட்களை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.

Update: 2018-09-14 23:00 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் தேவரசம்பட்டியில் நேற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 1,480 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். இதையொட்டி அவர் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்து வைத்து, சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், தாலி கயிறு, புடவை உள்ளிட்ட பொருட்களை வழங்கி பேசினார். அப்போது கலெக் டர் பேசியதாவது:- அடுத்த தலைமுறையை உருவாக்கும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் தான் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மட்டும் உட்கொண்டால் போதாது. அவர்கள் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை களைய இது போன்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்து உரிய ஆலோசனைகளை பெறுவது அவசியம்.

கர்ப்பிணிகள் தங்களுக்குள் உள்ள சந்தேகங்களை மற்றவர்களுடன் கலந்துரையாடுதவற்கான ஒரு நிகழ்வாகவும் இந்த சமுதாய வளைகாப்பு விழா அமைந்துள்ளது. கர்ப்ப காலத்தில் தாய் எந்த மன நிலையில் உள்ளாரோ, அவருக்கு பிறக்கும் குழந்தையும் அதே மனநிலையில் அதிகம் இருக்க வாயப்்புள்ளதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கோபால், கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி, பாலக்கோடு முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் சங்கர், தாசில்தார் வெங்கடேஷ்வரன் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்