1,021 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,021 அரசு தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களின் வசதியை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-14 21:30 GMT
திண்டுக்கல்,

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்த ஆண்டுதோறும் அரசு மானிய நிதி வழங்கி வருகிறது. அந்த நிதியை பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் எழுதுபொருள், விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட மாணவர்களின் தேவைக்கு பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.89 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,021 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு மட்டும் ரூ.3 கோடியே 16 லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என அனைத்து வகையான அரசு பள்ளிகளுக்கும் சேர்த்து ரூ.2 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பல மடங்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி பள்ளி வாரியாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கப்படும்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 15 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 799 பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், 101 முதல் 250 மாணவர்கள் வரையுள்ள 200 பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும், 251 முதல் 1,000 மாணவர்கள் வரையிலான 22 பள்ளிகளுக்கு தலா ரூ.75 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த மானிய நிதியில் 10 சதவீதத்தை சுகாதார தமிழகம் என்ற தலைப்பில் சுகாதார பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும். மீதமுள்ள பணத்தில் குழாயுடன் கூடிய கழிப்பறை, குடிநீர், கைகழுவும் வசதிகள் செய்தல் மற்றும் பராமரிப்பு, எழுதுபொருட்கள், பதிவேடு, விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல், கணினி, டி.வி.டி., புரஜெக்டர் போன்ற கருவிகளை பழுதுபார்த்தல் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு செலவழிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற்ற பிறகே செலவழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்