டிக்கெட் இல்லை என்று கூறி பலியான ரெயில் பயணிக்கு இழப்பீடு மறுக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு

டிக்கெட் இல்லை என்பதற்காக ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியான பயணிக்கு இழப்பீடு மறுக்க முடியாது என்று கூறி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-14 23:15 GMT
சென்னை,

சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயிலில் பயணித்த சீனிவாசன், சைதாப்பேட்டை-மாம்பலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தவறி விழுந்து பலியானார்.

இதைத்தொடர்ந்து இழப்பீடு கோரி, அவரது குடும்பத்தினர் ரெயில்வே தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். சீனிவாசன் ரெயிலில் பயணம் செய்ததற்கு ஆதாரமாக டிக்கெட் எதுவும் இல்லாததால் இழப்பீடு வழங்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சீனிவாசனின் குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ரூ.8 லட்சம் இழப்பீடு

மனுவை விசாரித்த நீதிபதி முரளிதரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ரெயில் விபத்திலோ அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்தோ பலியாகும் பயணி, ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தார் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை, ரெயில்வே நிர்வாகத்திற்கு தான் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, சீனிவாசன் ரெயிலில் பயணம் செய்ததற்கு ஆதாரமாக டிக்கெட் இல்லாததால் இழப்பீடு வழங்க முடியாது என்ற தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

சீனிவாசனின் குடும்பத்தினருக்கு ரெயில்வே நிர்வாகம் 8 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 7½ சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்