பரமத்திவேலூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் உருண்டது; பெங்களூரு டிராவல்ஸ் அதிபர் பலி

பரமத்திவேலூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் உருண்டது. இந்த விபத்தில் பெங்களூருவை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் பலியானார். டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-09-14 23:15 GMT
பரமத்திவேலூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு காந்தி நகரை சேர்ந்தவர் சதான்சாத்ரா. இவருடைய மகன் சுனில்சாத்ரா (வயது 50). டிராவல்ஸ் அதிபர். இவர் தனது நிறுவனத்திற்கான பஸ்சுக்கு கூண்டு அமைப்பதற்காக கரூருக்கு சொகுசு காரில் வந்தார். பின்னர் நேற்று மாலை கரூரில் இருந்து தனது சொகுசு காரில் பெங்களூருக்கு புறப்பட்டார். காரை பெங்களூரு ராய்பூர் பகுதியை சேர்ந்த பன்டேயாதவ் என்பவர் ஓட்டினார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- பரமத்திவேலூர் சாலையில் வந்த போது அந்த வழியாக வந்த சைக்கிள் மீது காரை மோதாமல் இருக்க டிரைவர் அதை இடதுபுறமாக திரும்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையை விட்டு பள்ளத்தில் 300 மீட்டர் தூரம் சென்று உருண்டது. பின்னர் அங்கிருந்த கட்டிட சுவர் மீது மோதி காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுக்குள் சிக்கிய டிராவல்ஸ் அதிபர் சுனில்சாத்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் டிரைவர் பன்டேயாதவ், சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த முனியன் மகன் சுரேஷ்(28), திருப்பத்தூரை சேர்ந்த நரசிம்மன் மகன் பிரபாகரன்(18) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்