அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை 13 அடி பின்நோக்கி நகர்த்தும் பணிகள் தொடக்கம்

குடியாத்தத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை 13 அடி பின்நோக்கி நகர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2018-09-14 22:00 GMT
குடியாத்தம், 

குடியாத்தம் தாழையாத்தம் பஜார் வரதராஜ தெருவில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டியபடி மற்றொரு கோவில் உள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தற்போது தரைமட்டத்திற்கும் கீழே சென்றுவிட்டதால் மழைகாலங்களில் கோவிலுக்குள் மழைநீர் செல்வதாலும், ஆகமவிதிகள் படியும் அதனை சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 16 அடி அகலமும், 37 அடி நீளமும் உள்ள இந்த கோவிலை பக்கவாட்டில் 1½ அடி நகர்த்தியும், 5 அடி உயர்த்தியும், 13 அடி பின்நோக்கியும் நகர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்த பணியில் அரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவிலை இடிக்காமல் நகர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும் சென்னை ராமநாதகுருக்கள் கூறியதாவது:-

கடந்த மே மாதம் கோவிலை நகர்த்துவது தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக பாலாலயம் பூஜை செய்யப்பட்டு, மூலவர் கோவில் பின்புறம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அரியானா கட்டுமான நிறுவனத்தினர் 500-க்கும் அதிகமான ஜாக்கிகளை கோவிலுக்கு கீழ்பகுதியில் அமைத்து கடந்த 4 மாதமாக முதல் கட்ட பணிகளை முடித்தனர். இதில் 15 பேர் பணியாற்றி வருகின்றனர்.

முதல் கட்டமாக பக்கவாட்டில் 1½ அடி கோவில் நகர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோவிலை பின்நோக்கி நகர்த்தும் பணிகள் தொடங்கி உள்ளது. தினமும் 2 அடி முதல் 3 அடி வரை பின்நோக்கி நகர்த்தப்பட்டு 13 அடி தள்ளியபிறகு ஒவ்வொரு அடியாக உயர்த்தப்பட்டு 5 அடி வரை உயர்த்தப்படும். சுமார் 45 நாட்களில் இப்பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கான பணிகளை திருப்பணி கமிட்டியை சேர்ந்த ஜி.ஜி.பொன்னம்பலம், ஜி.ஜி.மனோகரன், கே.கனகராஜ், ஆர்.பாபு, ஜி.எஸ்.லட்சுமிகாந்தன் மற்றும் விழாக்குழுவினர், அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்