மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர், அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர், அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயதாரணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

Update: 2018-09-14 23:00 GMT
பெரம்பலூர்,

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்ததாகவும், அதனை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கிறிஸ்டோபர் திலக் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜிமூக்கன், மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களை மாவட்ட தலைவர் தங்க.தமிழ்செல்வன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் சுஜாதா, வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் சந்திரமோகன் மற்றும் பலர் சிறப்புரையாற்றினர். ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்ததாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர். முடிவில் பெரம்பலூர் நகர தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாகவும், ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் போலீசார் கூறினர். அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதே கோரிக்கைக்காக அரியலூர் பஸ் நிலையம் முன்பு அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

இதில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு ரபேல் போர் விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கியதில் ஊழல் பெருகி உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் பேசி வருகின்றனர். அந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் ஊனம் அடைந்தவர்களிடம் 7 பேரையும் விடுதலை செய்யலாமா? என்பதை பற்றி கேட்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை மன்னிக்கவில்லை என்றார். இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அரியலூர் நகர தலைவர் சந்திரசேகர், பொருளாளர் மனோகரன், ரவிசந்திரபோஸ், அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி தொடர்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்