பெரம்பலூரில் வழக்கமான பாதை வழியாக விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு

பெரம்பலூரில் வழக்கமான பாதை வழியாக விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததை கண்டித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-14 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட பாடாலூர் கிராமத்தில் தேவேந்திர குல தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி, அதனை ஊர்வலமாக கொண்டு சென்று திருச்சி காவிரி ஆற்றில் கரைத்து வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு எங்கள் தெருவில் விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதி தராமல் இழுத்தடித்தனர்.

இந்நிலையில் விநாயகர் சிலையை நேற்று முன்தினம் எங்கள் தெருவில் வைத்தோம். இதனை தொடர்ந்து அனுமதியின்றி சிலை வைத்துள்ளதாக கூறி அரசு அதிகாரி ஒருவரும், பாடாலூர் போலீசாரும் எங்கள் பகுதி இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இளைஞர்களை தாக்கினர். இதையடுத்து நாங்கள் வழக்கம்போல் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதையில் அனுமதி கொடுக்காமல் சுடுகாடு வழியாக ஊர்வலமாக கொண்டு செல்ல போலீசார் அனுமதி கொடுத்தனர். வழக்கம் போல் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதையில், சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக கலெக்டர் சாந்தாவை நேரில் சந்தித்து மனுவை கொடுத்து விட்டு செல்வதற்காக பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார், கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்றால் ஒரு சிலர் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் மற்றவர்கள் கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுமாறும் கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வெளியே கொண்டு விட்டனர். அப்போது கலெக்டரை சந்திக்க விடாமல் தடுக்கும் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு அலுவலகத்துக்கு திரும்பிய கலெக்டர் சாந்தா பயணம் செய்த காரை பொதுமக்கள் வழிமறிக்க சென்றனர். ஆனால் கலெக்டரின் கார் டிரைவர் அலுவலகத்துக்கு செல்லும் வேறு ஒரு நுழைவு வாயில் வழியாக காரை திருப்பி மின்னல் வேகத்தில் ஓட்டி சென்றார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரையும் மீறி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் மீண்டும் நுழைந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டரை சந்திக்க விடாத போலீசாரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேதுராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் விநாயகர் சிலை வழக்கமாக ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதை குறித்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து பேசுமாறு, பொதுமக்களிடம் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் நேற்று மாலை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதனை சந்தித்து பேசினர். அவரும் போலீசார் கூறிய பாதை வழியாக விநாயகர் சிலையை கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். இதனை கண்டித்து அவர்கள் பெரம்பலூர் சங்குப்பேட்டையில் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறுவாச்சூரில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்