சாலைகளை தூய்மையாக பராமரிக்கவேண்டும் - அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவு

காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள சாலைகளை தூய்மையாக பராமரிக்கவேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன், நகராட்சி ஆணையருக்கு உத்தவிட்டுள்ளார்.

Update: 2018-09-14 23:15 GMT
காரைக்கால்,

காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள சாலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கு, புதுச்சேரி வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால் நகராட்சியின் கீழ் உள்ள காரைக்கால் பஸ் நிலையம் பயணிகள் பயன்படுத்துவதற்கு என்று பல்நோக்கு திட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் சிதிலமடைந்துள்ளதால் இவற்றை சீரமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

பஸ் நிலையத்தில், கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படவில்லை, வெளிப்புறம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள சாலைகள் சுகாதாரமற்ற நிலையில் நிலவுவதாக பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த புதுச்சேரி வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பஸ் நிலைய வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் கேசவன், நகராட்சி ஆணையர் சுபாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

ஆய்வின் போது பஸ் நிலையம் சீரமைப்பு பணிகளில் நிலவும் தாமதத்துக்கான காரணங்களை நகராட்சி ஆணையரிடம் அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர், பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிவறையை தூய்மையாக பராமரிக்க போதிய கவனம் செலுத்தவேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் மையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரிவுகள், பயணிகள் இருக்கைகள், பயணிகள் நடமாடும் வளாகம் ஆகியவற்றை தூய்மையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என ஆணையருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்