குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் கேசவன் தொடங்கி வைத்தார்

காரைக்காலில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கேசவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-09-14 23:30 GMT
காரைக்கால்,

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் பிரதம மந்திரியின் ராஷ்ட்ரிய போஷான் அபியான் என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. காரைக்கால் கலெக்டர் அலுவலக வாயிலில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், தன்னார்வலர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நிறைவு பெற்றது.

ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி சத்யா மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில், பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 வயது வரை குழந்தைக்கு சத்தான உணவு தரவேண்டும். கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும். பள்ளி செல்லும் சிறார்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, அம்பேத்கர் வீதி, மாதா கோவில் வீதி, நேரு வீதி வழியாக ஊர்வலம் காம ராஜர் நிர்வாக வளாகம் சென்றடைந்தது.

மேலும் செய்திகள்