திருவோத்தூர் பகுதியில் 434 பேருக்கு தனிப்பட்டா வழங்க கலெக்டர் உத்தரவு

திருவோத்தூர் பகுதியில் 434 பேருக்கு தனிப்பட்டா வழங்க கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-09-14 21:45 GMT
செய்யாறு, 


செய்யாறு டவுன் திருவோத்தூர் பகுதியில் செங்குந்தர் சமுதாயத்திற்கு சொந்தமான புஞ்சை சர்வே எண் 217 முதல் 231 ஆகிய சர்வே எண்ணில் 434 மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டி வாழ்ந்திட இலவசமாக வழங்கப்பட்டது.

அத்தகைய வீட்டு மனைப்பிரிவுகளில் வீடுகட்டி மின் இணைப்பு, குழாய் இணைப்பு மற்றும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி செலுத்தி வசித்து வருகின்றனர். இவர்களின் வீட்டு மனைக்கு தனியாக பட்டா வழங்காமல், கூட்டு பட்டாவாக இருந்து வருகிறது. இதனால் வீட்டினை தனித்தனியாக பத்திரவு பதிவு செய்யவோ, வீட்டு மனையை வைத்து வங்கியில் கடனுதவி பெற்று வீடு கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.

தனியாக பட்டா இல்லாததால் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அரசின் சலுகை பெறுவதில் தடையாக உள்ளதால் வீட்டுமனைக்கு தனித்தனியாக பட்டா வழங்கிட வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று செய்யாறில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சந்தித்து பல ஆண்டுகளாக மனை தனிப்பட்டா கேட்டு போராடி வருகிறோம், தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர், அக்டோபர் 3-ந் தேதிக்குள் இந்த பகுதியை சேர்ந்த 434 பயனாளிகளுக்கு மனை தனிப்பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து செய்யாறு தாசில்தார் மகேந்திரமணியிடம் தனிப்பட்டா வழங்கிட உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்