பெருமாள் கோவிலுக்குள் சுவர் ஏறி குதித்து வந்த மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை

கொரடாச்சேரி அருகே பெருமாள் கோவிலுக்குள் சுவர் ஏறி குதித்து வந்த மர்மநபர்கள், ஐம்பொன் சாமிசிலையை திருட வந்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-14 23:15 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கண்கொடுத்தவணிதத்தில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. திருவிழா நேரங்களில் அங்கிருந்து எடுத்து வரப்பட்டு விழா முடிந்தவுடன் மீண்டும் பாதுகாப்பகத்தில் வைக்கப்படும்.

இந்த கோவிலில் 13.9.2014 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் கும்பாபிஷேக நாளில் வருடாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் வருடாபிஷேகம் நடந்தது. இதற்காக ஐம்பொன்னாலான பெருமாள் சிலை திருவாரூர் பாதுகாப்பகத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு மற்றும் ஆராதனை முடிய இரவு நேரமாகி விட்டதால் மறுநாள் காலையில் பாதுகாப்பகத்திற்கு எடுத்து செல்லலாம் என்று கோவிலிலேயே சிலையை வைத்துள்ளனர்.

இதனால் பாதுகாப்புக்காக கோவில் ஊழியர் சக்கரபாணி மற்றும் பக்தர்கள் சிலர் கோவிலிலேயே தங்கியிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கோவில் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே வந்துள்ளனர். இந்த சத்தம் கேட்ட கோவிலில் படுத்திருந்த பக்தர்கள் கண்விழித்து சத்தம் போட்டுள்ளனர். இதனால் பயந்துபோன மர்ம நபர்கள் மீண்டும் சுவர் ஏறி குதித்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். சுவர் ஏறி குதித்த மர்ம நபர்கள் ஐம்பொன் சிலையை திருட வந்தார்களா? அல்லது கோவில் உண்டியலை திருட வந்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை திருடி சென்ற சம்பவம் நடந்துள்ள நிலையில், தற்போது நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலில் மர்மநபர்கள் நுழைந்ததால் சாமி சிலை பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திருவாரூர் பாதுகாப்பகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்