தற்கொலைக்கு அனுமதி கேட்டு என்.எல்.சி. ஒப்பந்ததாரரின் குடும்பத்தினர் போராட்டம்

கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு மகன், மருமகளுடன் என்.எல்.சி. ஒப்பந்ததாரரின் மனைவி கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-14 22:39 GMT
கடலூர், 


குறிஞ்சிப்பாடி தாலுகா காந்திநகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் ஆராவமுதன். இவர் என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி யசோதா(வயது 60). இவர் நேற்று தனது மகன் மோகன்தாஸ், மருமகள் உதயகுமாரி ஆகியோருடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர் அன்புசெல்வன் அங்கு இல்லை என்பதை அறிந்ததும் 3 பேரும் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜாகிருபாகரனை நேரில் சந்தித்து யசோதா மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 3.9.2018 அன்று நெய்வேலி 19-வது வட்டத்தில் உள்ள தபால் அலுவலகம் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த எனது கணவரிடம் ஒப்பந்த தாரர் ஒருவர், தன்னிடம் வாங்கிய பணத்துக்கு வட்டி வேண்டும் என்று கேட்டு அவரை தாக்கினர். மேலும் ரவுடிகளை வைத்து அவரை

காரில் கடத்தி சென்று நெய்வேலி 22-வது வட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கட்டிப்போட்டனர். பின்னர் எனது மகனையும் போன் செய்து வரவழைத்து அவனையும் கட்டிப்போட்டு தாக்கி துன்புறுத்தியுள்ளனர். இதுபற்றி நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) அதிகாலை ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் என் வீட்டுக்குள் வந்து என்னையும், எனது குடும்பத்தினரையும் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

எனவே கந்து வட்டி கேட்டு துன்புறுத்தும் ஒப்பந்ததாரர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டமிட்டு எங்கள் குடும்பத்தினர் மீது நடந்து வரும் இந்த தாக்குதலை கண்டித்து நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த யசோதா நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர்

2013-ம் ஆண்டு மானடிக்குப்பத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.1½ கோடி கடன் வாங்கி இருந்தார். அதற்கு ரூ.2 கோடியே 80 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி கொடுத்து இருக்கிறோம். இருப்பினும் அந்த ஒப்பந்த தாரர் கந்துவட்டி கேட்டு தொடர்ந்து துன்புறத்தி வருகிறார். இதற்கு சில காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம் என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகள்