பெண்ணை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு

சின்னசேலம் அருகே பெண்ணை மிரட்டி 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-14 23:27 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனூர் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி திலகம்(வயது 40). இவருடைய மகள் யுவஸ்ரீ(12) சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்காக அவர் தினமும் வாசுதேவனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பள்ளி பேருந்தில் சென்று வந்தார். மேலும் திலகம் தனது மகளுடன் வாசுதேவனூர் பஸ் நிறுத்தத்துக்கு சென்று யுவஸ்ரீயை பேருந்தில் ஏற்றி விட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் திலகம், யுவஸ்ரீயை பள்ளி பஸ்சில் ஏற்றி விட்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் திலகத்தின் வீட்டுக்குள் புகுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த திலகம் நீங்கள் யார்? என்று அந்த நபரிடம் கேட்டுள்ளார். உடனே அவர் திலகத்திடம், கழுத்தில் அணிந்திருக்கும் நகையை கழற்றிக்கொடுக்குமாறும், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த திலகம் தான் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழற்றி அருகில் இருந்த மேஜை மீது வைத்தார். இதையடுத்து அந்த மர்மநபர், நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் இதுகுறித்து திலகம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்