பல்லடத்தில் 230 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு கலெக்டர் தலைமையில் நடந்தது

பல்லடத்தில் 230 கர்ப்பிணிகளுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2018-09-14 23:36 GMT
பல்லடம், 

திருப்பூர் மாவட்ட சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. அதன்படி பல்லடத்தில் வைஸ் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமைதாங்கினார். கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னிலைவகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் ந.மலர்விழி வரவேற்று பேசினார்.

230 கர்ப்பிணிகள்

விழாவில் 230 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கி வளைகாப்பு நடத்தப்பட்டது. சீர்வரிசை தட்டில் சேலை, சட்டைத்துணி, வளையல்கள், குங்குமசிமிழ் அடங்கிய தொகுப்பு பொருட்கள் இடம்பெற்று இருந்தன. பின்னர் கர்ப்பிணிகளுக்கு 5 வகை சாதங்களை கலெக்டர் பரிமாறினார்.

முன்னதாக கர்ப்பிணிகள் அனைவருக்கும் ஊட்டச்சத்து, தாய்ப்பாலின் முக்கியத்துவம், கூடுதல் உணவு, தடுப்பூசியின் முக்கியத்துவம், எடை கண்காணிப்பு, கைகழுவும் முறை போன்றவை குறித்து விளக்கி கூறப்பட்டது.

விழாவில் துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) டாக்டர் ஜெயந்தி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சூர்யா, பல்லடம் தாசில்தார் அருணா, அ.தி.மு.க. நிர்வாகிகள் சிவாச்சலம், தண்ணீர்பந்தல் நடராஜன், சித்துராஜ், சரளை பி.ரத்தினசாமி, வைஸ்.பி.கே.பழனிசாமி, பாரதி செல்வராஜ், விஸ்வ நாதன், சின்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் குழந்தை வளர்ச்சித்திட்ட அதிகாரி ஜெயலதா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்