7 பேர் விடுதலை சம்பந்தமான தீர்மானத்தை கவர்னர் டெல்லிக்கு அனுப்பியது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது - கி.வீரமணி பேட்டி

7 பேர் விடுதலை சம்பந்தமான தீர்மானத்தை கவர்னர் டெல்லிக்கு அனுப்பியது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது என்று ஈரோட்டில் கி.வீரமணி கூறினார்.

Update: 2018-09-15 23:00 GMT

ஈரோடு,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெரியார் பிறந்த மண்ணில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது எனக்கு கிடைத்த பாக்கியம். அண்ணா வெறும் சிலை அல்ல. அவர் ஒரு சீலம். வெறும் படம் அல்ல, அவர் ஒரு பாடம். அண்ணா வகுத்த நெறி இன்றைக்கும் அரசியலில் அசைக்க முடியாத அரசியல் நெறியாக உள்ளது.

50 ஆண்டு கால திராவிட இயக்கத்தை அண்ணாவிற்கு பிறகு கருணாநிதியும், தற்போது 4–வது தலைமுறையாக ஸ்டாலினும் கட்டி காத்து வருகிறார்கள். இது தொடரும். மதச்சார்பின்மை, சுயமரியாதை, சமூக நீதி, பெண்ணுரிமை, மனிதாபிமானம் ஆகியவை தழைத்தோங்க வைப்பது தான் திராவிடம்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது இந்தியா உதவியதாக கூறி உள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. அது உண்மை என்றால் இந்திய அரசின் நிலைப்பாடு தமிழர்களுக்கு விரோதமாகத்தான் இருக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த தி.மு.க.வை இலங்கைக்கு உதவியதாக பாரதீய ஜனதா கட்சி குற்றம் சாட்டுகிறது. வரலாறு மறந்து பா.ஜ.க.வினர் பேசுகிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதேபோல் தற்போதும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் கொடுத்துள்ளனர். கவர்னர் அந்த தீர்மானத்தை டெல்லிக்கு அனுப்பியது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானது ஆகும். 7 பேரின் விடுதலையை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு இது ஒன்றும் மசோதா அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்