வனவிலங்குகளை வேட்டையாட அமைத்திருந்த சுருக்கு கம்பியில் சிக்கிய ஆண் சிறுத்தை செத்தது

வனவிலங்குகளை வேட்டையாட அமைத்திருந்த சுருக்கு கம்பியில் சிக்கி ஆண் சிறுத்தை செத்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-15 22:30 GMT
குடகு, 

வனவிலங்குகளை வேட்டையாட அமைத்திருந்த சுருக்கு கம்பியில் சிக்கி ஆண் சிறுத்தை செத்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செத்து கிடந்த சிறுத்தை

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சுண்டிகொப்பாவில் ஒரு காபி தோட்டத்திற்கு நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது தோட்டத்தில் ஒரு மரத்தில் வனவிலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்டு இருந்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை ஒன்று செத்து கிடந்தது.

இதுபற்றி சுண்டிகொப்பா வனத்துறையினருக்கு தொழிலாளர்கள் தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது வனவிலங்குகளை வேட்டையாட மர்மநபர்கள் சுருக்கு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு சுருக்கு கம்பியில் சிறுத்தையின் கழுத்து சிக்கியதும், தப்பி முயன்றதால் சுருக்கு கம்பி கழுத்தை இறுக்கியதில் சிறுத்தை செத்ததும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் அழைக்கப்பட்டு, செத்துபோன சிறுத்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அதே இடத்தில் குழி தோண்டி சிறுத்தை உடல் புதைக்கப்பட்டது.

செத்துபோன சிறுத்தை ஆண் சிறுத்தை என்றும், அதற்கு 8 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வனத்துறையினர் சுண்டிகொப்பா போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனவிலங்குகளை வேட்டையாட சுருக்கு கம்பி அமைத்த நபர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்