தாய்-மகள் உள்பட 5 பேர் நசுங்கி சாவு வேன் மீது லாரி மோதியது

உத்தர கன்னடா அருகே, வேன் மீது லாரி மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

Update: 2018-09-15 23:00 GMT
மங்களூரு, 

உத்தர கன்னடா அருகே, வேன் மீது லாரி மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

வேன் மீது லாரி மோதியது

உத்தர கன்னடா மாவட்டம்(கார்வார்) ஒன்னாவர் தாலுகா கர்கிமடம் வழியாக எடப்பள்ளி-பன்வேல் தேசிய நெடுஞ்சாலை 66 செல்கிறது. இப்பகுதியில் நேற்று மாலை பயணிகளை ஏற்றிக் கொண்டு குமட்டாவில் இருந்து ஒன்னாவர் நோக்கி ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது.

அப்போது எதிரே ஒரு லாரி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த லாரி, வேன் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

5 பேர் சாவு

மேலும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வந்து வேனில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வேனின் இடிபாடுகளில் சிக்கி ஒரு சிறுமி, 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல்நசுங்கி இறந்தது தெரிந்தது. மேலும் 4 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள். அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து குறித்து அறிந்த ஒன்னாவர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில் அவர்களின் பெயர்கள் ஒன்னாவரை சேர்ந்த விக்னேஷ்வர்(வயது 45), வேன் டிரைவர் பாபு(35), சுமதி(32), சுமதியின் மகள் சிஞ்சனா(6), கமலாகர் பண்டாரி(50) என்பது தெரிந்தது. படுகாயம் அடைந்த 4 பேரின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து பலியான 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து ஒன்னாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய்-மகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் கர்கிமடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்