மத்திய அரசின் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்

மத்திய அரசின் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-09-15 23:45 GMT

புதுச்சேரி,

மத்திய பா.ஜ.க. அரசு, பிரான்ஸ் நாட்டுடன் செய்துள்ள ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடும், ரூ.41 ஆயிரம் கோடி ஊழலும் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ரபேல் விமான ஒப்பந்தம் மற்றும் ஊழலை கண்டித்தும், அதன் மீது விசாரணை நடத்தக்கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

ஊர்வலத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி, தீப்பாய்ந்தான், தனவேலு, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், கட்சியின் துணை தலைவர்கள் நீல.கங்காதரன், பி.கே.தேவதாஸ், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை வழியாக சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு முடிவடைந்தது. அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முத்தியால்பேட்டை முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கலியபெருமாள், முன்னாள் மாநில செயலாளர் பி.எம்.சரவணன், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் லட்சுமிகாந்தன் மற்றும் செல்வாம்பிகை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தின்போது 4 மாதிரி ரபேல் விமானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு ஒன்று தத்ரூபமாக விமானம் போன்றே அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் விமானத்தின் பின்புறம் புகை வருவது போல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஊர்வலத்தின் முடிவில் முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரியிடம் மனு அளித்தனர்.

இந்த ஊர்வலத்தின் காரணமாக புதுவை நகர பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறைமலை அடிகள் சாலையில் காலை முதல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. புதுவை புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலைக்கு வராமல், சுப்பையா சிலை நோக்கி திருப்பி விடப்பட்டது. இதேபோல் மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் ஊர்வலம் சென்றபோது போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்