பந்தலூர் அருகே பள்ளி மைதானத்தில் அரசு கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

பந்தலூர் அருகே பள்ளி மைதானத்தில் அரசு கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-15 22:15 GMT

பந்தலூர்,

பந்தலூர் அருகே உள்ளது அம்பலமூலா. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளியை ஒட்டியுள்ள இடத்தை பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அதனருகில் பள்ளி மைதானமும் உள்ளது. இதற்கிடையில் பள்ளி மைதானம் உள்ள இடத்தில் அரசு கட்டிடம் ஒன்று கட்டுவதற்கு நில அளவீடு செய்யும் பணி நடந்ததாக தெரிகிறது. அந்த கட்டிடம் கட்டப்பட்டால் பள்ளி மைதானத்தின் பரப்பளவு குறைந்துவிடும், மேலும் மயானத்தின் ஒரு பகுதியும் ஆக்கிரமிக்கப்படும் எனக்கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும், மைதான இடத்தில் வேறு கட்டிடம் கட்டக்கூடாது, மயானத்தில் நில அளவீடு செய்து அதன் எல்லையை வரையறை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பள்ளி மைதானத்தில் திரண்டு நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பந்தலூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் கர்ணன், யுவராஜ், நில அளவையர் வினோத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது முதற்கட்டமாக மயானத்தில் நில அளவீடு செய்து எல்லைப்பகுதி வரையறை செய்யப்படும், அரசு கட்டிடம் கட்டும் பிரச்சினைக்கு பின்னாளில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நில அளவீடு செய்து மயானத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்