மோகனூர், பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

மோகனூர், பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Update: 2018-09-15 22:39 GMT
மோகனூர்,

நாடு முழுவதும் கடந்த 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மோகனூர் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக மோகனூர் காவிரி ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு பக்தர்கள் பக்தி பரவத்துடன் விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைத்தனர். அர்த்தநாரீஸ்வரருடன் விநாயகர் சிலை, மயில், சிங்கம், புலி, பசுமாடு, ஆதிசேஷன் ஆகிய வாகனங்களில் அமர்ந்த விநாயகர் சிலைகளும் கொண்டு வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

மோகனூர் காவிரி ஆற்றில் சேலம் மாவட்டம் மல்லூர், நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், ராசிபுரம், பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, மெட்டாலா, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, எருமப்பட்டி, வளையபட்டி, அணியாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 672 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் ஏராளமான போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீச்சல் தெரிந்த நபர்கள், மீனவர்கள் என 10 பேர் 2 பரிசல்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பரமத்திவேலூர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு காவிரி ஆற்றில் 250-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராசிபுரத்திலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு மோகனூர் உள்ள காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. குமாரப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. முன்னதாக காவிரி ஆற்றின் கரையோரத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அப்போது திரளான பக்தர்கள் விநாயகர் சிலையை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்