திண்டுக்கல்லில் பதற்றம்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம்-பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-15 23:30 GMT
திண்டுக்கல்,

விநாயகர் சதுர்த்தியையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 1,183 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. திண்டுக்கல் நகரில் மட்டும் 56 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் சிலைகள் ஊர்வலம் நடந்து வருகிறது.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி ஊர்பொதுமக்கள் சார்பில் அங்குள்ள கருப்பசாமி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

நேற்று காலை 10.15 மணியளவில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் செல்லும் பாதை நெடுகிலும் வரிசையாக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். தாரை தப்பட்டை முழங்க விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

வத்தலக் குண்டு பைபாஸ் சாலை ரவுண்டானாவில் இருந்து பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் வரை தாரை தப்பட்டை அடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, குறிப்பிட்ட இடத்தை கடந்து செல்லும் வரை தாரை தப்பட்டை அடிப்பது நிறுத்தப்பட்டு பஜனை பாடல் இசைக் கப்பட்டது.

பெரிய பள்ளிவாசலை கடந்த பிறகு, தாரை தப்பட்டை முழக் கத்துடன் மீண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. இதற்கிடையே, தாரை தப்பட்டை அடிப்பதற்கு அங்கு நின்றிருந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இருதரப்பினரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திடீர் பதற்றம் உருவானது. ஒரு தரப்பினர் பள்ளிவாசல் முன்பு திரண்டனர். பரபரப்பான சூழ்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாஷினி ஆகியோர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சமாதானம் அடைந்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே விநாயகர் சிலை ஊர்வலமானது மேற்குரத வீதி வழியாக கோட்டை குளத்தை சென்றடைந்தது. பின்னர், அங்குள்ள தொட்டியில் சிலையை பொதுமக்கள் கரைத்தனர்.

மேலும் செய்திகள்