புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

Update: 2018-09-15 23:09 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள கட்டியாவயலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம், அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவிற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், ஆளுயர மாலை அணிவித்து, செங்கோல் மற்றும் வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையும் என்று கூறும் வகையில் இந்த கூட்டம் அமைந்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், கொள்ளிடம் வழியாக வீணாக ஆற்றில் கலக்கும் தண்ணீரை, வறட்சியின் பிடியில் இருக்கும் புதுக்கோட்டைக்கு கொண்டு வந்து, நீர்மட்டத்தை உயரச் செய்து, விவசாயத்தை பெருக்குவோம்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நலனுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து பாடுபடும். புதுக்கோட்டையில் இருந்து அமைச்சராக இருக்கும் டாக்டர் ஒருவர் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார். அவர் வீட்டில் சோதனை செய்யாத துறைகளே இல்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் என்னை வெற்றிபெற வைக்கத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வேலை செய்கிறார் என நினைத்தேன். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து தேர்தலை நிறுத்த தான் பணியாற்றினார் என பின்னர் தான் தெரிந்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் வழங்கியும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. தற்போது திருப் பரங்குன்றத்திலும், திருவாரூரிலும் நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என அ.தி.மு.க. அமைச்சர்கள் பேசி வருகின்றனர். ஆனால் அங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெறும். அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்.

மின்சார துறை அமைச்சர் மின்வெட்டை சரிசெய்ய தவறிவிட்டார். ஒடிசா போன்ற மாநிலங்களில் நிலக்கரி வாங்கி வைத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது பிரதமருக்கு நிலக்கரி கேட்டு கடிதம் எழுதுகிறார்.

நான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குடும்பத்தினருடன் நடைபயிற்சி சென்றபோது, புதுக்கோட்டையை சேர்ந்த அமைச்சராக உள்ள டாக்டர் என்னை பார்த்து வணக்கம் வைத்தார். நானும் பதிலுக்கு வணக்கம் வைத்தேன். அப்போது அவர் என்னை முதல்-அமைச்சர் கைவிட்டு விட்டார் என்று தெரிவித்தார்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், வேலுமணி ஆகியோர் என்ன செய்வது என்று தெரியாமல் எப்போதும் தடுமாற்றத்துடன் பேசி வருகின்றனர். துரோகிகளை அரசியலில் இருந்து ஓரங்கட்ட தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் வருகிற தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் எங்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பரணி.கார்த்திகேயன் பேசுகையில், “புதுக்கோட்டை மக்கள் விவசாயத்திற்காக தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்ளிடம் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், டி.டி.வி.தினகரன் தமிழக முதல்-அமைச்சர் ஆனதும் முதல் கையெழுத்து போடுவார்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி பேசுகையில், “புதுக்கோட்டையில் நடைபெறும் அடுத்த கூட்டம் டி.டி.வி.தினகரன் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் நடக்கும் கூட்டமாக தான் இருக்கும். மக்கள் சக்தியை விட்டு டி.டி.வி.தினகரனை பிரிக்க முடியாது” என்றார்.

கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சி.ஆர்.சரஸ்வதி, மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், மாநில மகளிரணி துணை செயலாளர் விஜயா, அறந்தாங்கி நகர செயலாளர் சிவசண்முகம், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் (அறந்தாங்கி தெற்கு), ராஜ்குமார் (அறந்தாங்கி வடக்கு), செல்லக்கண்ணு (ஆவுடையார்கோவில்), அக்பர் அலி (மணமேல்குடி), செங்கொடியான் (கந்தர்வகோட்டை), பரிவீரமங்களம் சேனா.அரவிந்த், வழக்கறிஞர் பிரிவு நவநீதன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராதாகிருஷ்ணன், கந்தர்வகோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளரும், தொகுதி கழக செயலாளருமான நாராயணசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்