கோவில்பட்டி அருகே வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை தொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தொழிலாளர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில்பட்டி அருகே வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-09-15 23:17 GMT
கோவில்பட்டி, 

தொழிலாளர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில்பட்டி அருகே வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் 

கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணசாமி மகன் திருப்பதி (வயது 35), குருசாமி மகன் வேல்சாமி (27). ஆடு மேய்க்கும் தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் குருமலை தாழையூத்து மலை அடிவாரத்தில் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். அப்போது சில ஆடுகள் மலை அடிவாரத்தில் உள்ள கம்பி வேலியை தாண்டி, வனப்பகுதிக்குள் சென்றன.

உடனே திருப்பதி, வேல்சாமி ஆகிய 2 பேரும் வனப்பகுதிக்குள் நுழைந்து ஆடுகளை வெளியே விரட்டினர். அப்போது அங்கு வந்த வனத்துறையினர் 5 பேர் சேர்ந்து திருப்பதி, வேல்சாமி ஆகிய 2 பேரையும் கம்பால் தாக்கி, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

வனத்துறை அலுவலகம் முற்றுகை 

இதில் காயம் அடைந்த திருப்பதி, வேல்சாமி ஆகிய 2 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அப்போது அவர்களை அங்கு வந்த வனத்துறையினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி, வேல்சாமி ஆகிய 2 பேரும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து ஆடு மேய்க்கும் தொழிலாளர்களை தாக்கிய வனத்துறையினரைக் கண்டித்து, ஊத்துப்பட்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தை அப்பகுதி மக்கள் நேற்று மதியம் முற்றுகையிட்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் பாபு, துணை செயலாளர் சேதுராமலிங்கம், கிளை செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை 

முற்றுகையிட்டவர்களிடம் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்