கரூரில் பரிதாபம்: மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கரூரில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-09-16 00:04 GMT
கரூர்,

கரூரில் மருத்துவ கல்லூரி மாணவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் காந்திகிராமம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவருடைய மகன் ரகுநாதன்(வயது 22). இவர் ஜார்ஜியா நாட்டில் உள்ள மருத்துவகல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த ரகுநாதன் மன உளைச்சலில் இருந்தார்.

தற்போது விடுமுறை காலம் முடிந்ததால் மீண்டும் வெளிநாட்டிற்கு படிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் அவர் தயாராகி கொண்டு இருந்தார். இந்த நிலையில் வாழ்வதற்கு பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று திடீரென வீட்டின் அறையில் தூக்குப்போட்டு ரகுநாதன் தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி துடித்தனர்.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரகுநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக ரகுநாதன் தற்கொலை செய்து கொண்டாரா?, காதல் பிரச்சினையா? அல்லது வெளிநாட்டு கல்லூரியில் ராக்கிங் கொடுமையால் பாதிக்கப்பட்டு இந்த துயர முடிவுக்கு வந்தாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்