ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்

ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங் களை வினியோகித்தனர்.

Update: 2018-09-16 00:08 GMT
கரூர்,

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேசத்தின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

அந்த வகையில் ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக பா.ஜ.க. அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர்கள் ஜோதிமணி, திருச்சி வேலுசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பேங்க் சுப்பிரமணியன், ஸ்டீபன் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. வெள்ளியணை ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரூர் வையாபுரி நகர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். கோவை ரோடு வழியாக ஊர்வலமாக சென்றவர்கள் காங்கிரஸ் கொடியை கையில் பிடித்தபடி கோஷமிட்டனர். அப்போது ரபேல் போர் விமான ஊழல் அரங்கேறியது எப்படி?, விமானம் வாங்கியதில் எந்த வகையில் விதிகள் மீறப்பட்டுள்ளன? என்பன உள்ளிட்ட புள்ளி விவரங்களை பட்டியலிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். மேலும் இந்த ஊழலை விசாரிக்க கூட்டு பாராளுமன்றகுழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஊர்வலமானது மனோகரா கார்னர் ரவுண்டானாவை கடந்து ஜவகர் பஜார் பகுதியில் நிறைவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் கரூர் நகர தலைவர் சவுந்தரராஜன், வட்டார தலைவர்கள் ஆடிட்டர் ரவிசந்திரன், ராஜ்குமார், மனோகரன், ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் லியோ சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்