வியாசர்பாடியில் கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை உறவினர் கைது

வியாசர்பாடியில், கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-16 23:00 GMT
பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி எம்.எம்.கார்டனை சேர்ந்தவர் மஸ்காரின் (வயது 59). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இறந்து விட்டார். ஒரே ஒரு மகள் உண்டு. அவரை திருமணம் செய்து கொடுத்து விட்டார். இதனால் மஸ்காரின் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

அதே பகுதியில் மஸ்காரினுக்கு பூர்வீக சொத்தான 700 சதுர அடியில் வீடு உள்ளது. அந்த வீட்டில் அவருடைய அக்காவுக்கும் பங்கு உள்ளது. இந்த வீட்டின் பாதியில் மஸ்காரினும், மீதி பாதி வீட்டில் அவருடைய அக்கா மகனான எல்லப்பன்(31) என்பவர் குடும்பத்துடனும் வசித்து வருகிறார்.

மஸ்காரினுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து எல்லப்பனிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால் தாய்மாமன்தானே குடிபோதையில் பேசுகிறார் என அதை எல்லப்பன் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மஸ்காரின் குடிபோதையில் எல்லப்பனிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த எல்லப்பன், எதற்காக இப்படி தினமும் குடித்துவிட்டு வந்து இரவில் தூங்கவிடாமல் தகராறில் ஈடுபட்டு தொல்லை கொடுக்கிறாய்? என தாய்மாமனை தட்டிக்கேட்டார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில் மேலும் ஆத்திரமடைந்த எல்லப்பன், அங்கு கிடந்த மரக்கட்டையால் தாய்மாமன் மஸ்காரின் தலையில் தாக்கினார். இதில் அவரது மண்டை பிளந்து ரத்தம் கொட்டி யது. சம்பவ இடத்திலேயே மஸ்காரின் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனால் பயந்துபோன எல்லப்பன் தலைமறைவாகி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கொலையான மஸ்காரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து எல்லப்பனை தேடிவந்தனர். நேற்று காலை அதே பகுதியில் பதுங்கி இருந்த எல்லப்பனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்