மாமல்லபுரம், பழவேற்காட்டில் விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 13-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தெருக்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.

Update: 2018-09-16 22:30 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான திருக்கழுக்குன்றம், மங்கலம், கழனிப்பாக்கம், திருநிலை, கல்பாக்கம், மேலப்பட்டு, மானாமதி, கன்னிகுளம், எச்சூர், செங்கல்பட்டு, திருப்போரூர், ஓட்டேரி, ஆமூர், சிறுதாவூர், மேலப்பட்டு, கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள்கோவில், திம்மாவரம் உள்பட பல்வேறு இடங்களில் 6 அடி, 10 அடி, 15 அடி உயர விநாயகர் சிலைகள் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தினார்கள்.

இந்த சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க நேற்று பக்தர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் தற்காலிக டிராலி ஏற்பாடு செய்து, தாங்கள் தயாரித்து வைத்துள்ள நபர்கள் மூலம் ஒவ்வொரு விநாயகர் சிலையையும் வாங்கி கடலில் கரைத்தனர். மொத்தம் 500 விநாயகர் சிலைகள் டிராலி மூலம் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் கடலில் இறங்கி குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. மதுபோதையில் வரும் ஒரு சிலர் கடலில் இறங்கி குளிக்கும்போது உயிரிழப்பு ஏற்படுவதால் இந்த ஆண்டு யாரையும் கடலில் இறங்கி சிலைகளை கரைக்க அனுமதி வழங்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மீஞ்சூர், பொன்னேரி, காட்டூர், திருவெள்ளைவாயல், நாலூர், இலவம்பேடு போன்ற பகுதிகளில் 8 அடி உயரத்திற்கு விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. விநாயகர் சிலை அமைப்புக்குழு தலைவர் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் தலைமையில் விநாயகர் சிலைகள் எடுத்து செல்லப்பட்டு பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டது.

மீஞ்சூர் வேளாளர் தெருவில் உள்ள கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ரமேஷ்பாபு தலைமையில் லாரியில் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. அப்போது விநாயகர் சிலை நிர்வாக குழுவை சேர்ந்த அப்பாசாமி, வாசு உள்பட ஏராளமான பக்தர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்