குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-16 21:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது நல்லதண்ணிகேணி தெரு. இந்த தெருவில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தெருவிளக்குகளும் சரியாக எரியாத நிலையில், கழிவுநீர் வாய்க்காலும் சுத்தம் செய்யப்படவில்லை.

சுத்தம் செய்ய வந்தாலும் ஒவ்வொரு முறையும் ரூ.500 பணம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுதொடர்பாக பள்ளப்பட்டி ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீச தொடங்கியது. இதன்காரணமாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், நேற்று காலை திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் குடைப்பாறைப்பட்டி அருகே மறியலில் ஈடுபட்டனர். மேலும், கைகளில் காலிக்குடங்களுடன் குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களும் எழுப்பினர்.இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த நகர் தெற்கு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்