லால்குடி அருகே பரிதாபம்: நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பலி

லால்குடி அருகே நண்பர்களுடன் கொள்ளிடம் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-09-16 23:15 GMT
லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள தேர்முட்டி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக். வெளிநாட்டில் வேலை பார்க்கும் இவர், தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவருடைய மகன் முகமது ஆசிக்(வயது 19). இவர் திருச்சி குண்டூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரும், லால்குடி ஒ.எம்.ஏ. தெருவை சேர்ந்த முகமது இக்பால் மகன் சாகுல்ஹமீது(18), கொத்த தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் அஜித்(18), பரமசிவபுரம் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் நந்தகுமார்(18) ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள். இதில் சாகுல்ஹமீது குண்டூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். அஜித், நந்தகுமார் ஆகியோர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

அவர்கள் 4 பேரும் நேற்று லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சைக்கிள்களில் சென்றனர். அங்கு ஆற்றில் குளித்தபோது முகமது ஆசிக், சாகுல்ஹமீது ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென இருவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்ததை கண்ட அஜித், நந்தகுமார் ஆகியோர் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகே குளித்துக் கொண்டிருந்தவர்கள் சாகுல்ஹமீதை மீட்டனர்.

ஆனால் முகமது ஆசிக் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை லால்குடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாகுல்ஹமீது லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து முகமது ஆசிக்கின் தந்தை முகமது ரபீக் கொடுத்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மேலும் செய்திகள்