வைகை அணையில் நீர் திறப்பு: தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்ததால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆற்றை கடந்து பூங்காவுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

Update: 2018-09-16 21:52 GMT
ஆண்டிப்பட்டி,


ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வைகை அணையில் பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு திடல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளது. வைகை அணையில் வலது மற்றும் இடது கரைப்பகுதிகளில் பூங்கா அமைந்துள்ளது. இரண்டு கரைப்பகுதிகளிலும் உள்ள நுழைவுவாயிலில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வைகை அணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒரு பகுதியில் நுழைவுக்கட்டணம் செலுத்தினால், இரண்டு கரைப்பகுதிகளில் உள்ள பூங்கா பகுதிகளை சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடலாம். இதற்காக இரண்டு கரைகளுக்கு இடையே உள்ள வைகை ஆற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் அந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதன்காரணமாக தரைப்பாலத்தின் வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் முட்களை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் அடைக்கப்பட்டுள்ளதால், வைகை அணைக்கு வரும் சுற்றுலாபயணிகள் இரண்டு கரைப்பகுதிகளிலும் அமைந்துள்ள பூங்காக்களை சுற்றிப் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மற்றொரு கரைக்கு செல்ல வேண்டுமெனில் மீண்டும் அணைக்கு வெளியே வந்து சாலையின் வழியாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்கா பகுதிகளை முழுமையாக சுற்றி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

நீர் திறக்கும்போது தரைப்பாலம் மூழ்குவதால், உயரமான பாலம் அமைத்தால் இரண்டு பகுதிகளுக்கும் தடையின்றி செல்ல முடியும். எனவே வைகை அணையின் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்