குமாரபாளையம் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்; 13 பேர் காயம்

குமாரபாளையத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 13 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-09-16 23:34 GMT
குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அனுமதி பெறாமல் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அனைத்து விநாயகர் சிலைகளையும் குமாரபாளையத்தில் புதுப்பாலம், பழைய பாலம், காவேரி நகர் புதுப்பாலம் ஆகிய பகுதிகளில் மட்டும் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் முதல் காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

குமாரபாளையத்தில் நாராயணநகர் பகுதியில் இருந்து வந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கு காலனி மற்றும் பள்ளிபாளையம் பிரிவு ரோடு, காவேரி நகர் ஆகிய 3 இடங்களில் திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த இளைஞர்கள் போதை தலைக்கேறிய நிலையில் ஆட்டம் போட்ட போது ஏற்பட்ட தகராறு பெரிய கோஷ்டி மோதலாக வெடித்தது. மேலும் டிரம்ஸ் வாசித்த வாத்தியக்குழுவிலும் மோதல் ஏற்பட்டது. டிரம்ஸ் அடிக்கும் குச்சியிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

செங்கல் மற்றும் தடிகளை கொண்டு ஒருவரை ஒருவர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 பேரின் மண்டை உடைந்தது. 10 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்