வனப்பகுதியில் சிறுத்தைப்புலிகளை கொன்றது சொகுசு விடுதிகளில் தங்கியவர்களா? வனத்துறை விசாரணை தீவிரம்

காண்டூர் கால்வாயை ஒட்டிய வனப்பகுதியில் சிறுத்தைப்புலிகளை கொன்றது சொகுசு விடுதிகளில் தங்கியவர்களா? என்று வனத்துறை விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

Update: 2018-09-17 22:30 GMT

ஆனைமலை,

ஆழியாறு அருகே காண்டூர் கால்வாயை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த 6–ந் தேதி சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுத்தைப்புலியை கொன்ற மர்ம நபர்கள் தலை, கால்களை வெட்டி கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பொள்ளாச்சி வனச்சரகர், வனவர்கள் 3 பேர் (இதில் ஒருவர் பெண் வனவர்) மற்றும் வனத்துறை அலுவலர்கள் சிலர் விசாரணை என்ற பெயரில் மலைவாழ் மக்களை அடித்து சித்ரவதை செய்வதாக புகார் எழுந்தது. கடந்த 12–ந் தேதி 150–க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் ஆனைமலையில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின்போது, வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் முதற்கட்ட விசாரணை தொடங்கி உள்ளது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சிறுத்தை புலி இறந்தது, மலைவாழ் மக்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் புகார் உள்ளிட்டவை குறித்து வனத்துறையின் பொள்ளாச்சி கோட்டத்திற்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் விசாரணையை தொடங்கியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையிலேயே பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் 4–ந் தேதி திருமூர்த்தி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அரிய வகை விலங்கினமான கருஞ்சிறுத்தை ஒன்று தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இது காண்டூர் கால்வாயில் அடித்து வரப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்தது. கருஞ்சிறுத்தை திருமூர்த்தி வனப்பகுதியில் இல்லை. டாப்சிலிப், பொள்ளாச்சி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியிலேயே இந்தவகை கருஞ்சிறுத்தை உள்ளது. ஆகவே இப்பகுதியில்தான் சிறுத்தை வேட்டை அடிக்கடி நடக்கிறது என்பது உறுதியானது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கென அமராவதி வனச்சரகத்தில் மட்டும் டிஸ்லி என்ற பெயர் கொண்ட மோப்ப நாய் (பெண் நாய்) ஒன்று உள்ளது. ஆழியார் பகுதியில் தலை, கால் துண்டிக்கப்பட்ட சிறுத்தைப்புலி இருப்பது கடந்த 6–ந் தேதி தெரியவந்தது. 7–ந் தேதி மோப்ப நாய் டிஸ்லி சிறுத்தைப்புலி இருந்த இடத்துக்கு அழைத்து வரப்பட்டது. அந்த நாய் சிறுத்தைப்புலி கிடந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று இரு தனியார் தோட்டங்களுக்கு இடையே நின்றது. மீண்டும் 2 முறை சம்பவ இடத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதி அருகே சென்று நின்றது. அப்படியானால் அந்த சொகுசு விடுதியில் தங்கியவர்களோ அல்லது தனியார் தோட்டத்தைச் சேர்ந்தவர்களோ இந்த வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகமும் உள்ளது. இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

அப்படியிருக்கும்போது சம்பந்தம் இல்லாத மலைவாழ் மக்களை ஏன் வனச்சரகரும், வனவர்களும் சேர்ந்து விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல் பொள்ளாச்சி சரகத்தில் காண்டூர் கால்வாய் (ஆழியாறு அருகே), குண்டுருட்டி பள்ளம், வெடிக்காரன்பாலி, நல்லாறு காலனி, நவமலை, பெரியசோலை (அய்யர்பதி), மணியஞ்சோலை ஆகிய 7 இடங்களில் வேட்டைத் தடுப்பு முகாம்கள் உள்ளன. இவற்றில் 27 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணியாற்றுகின்றனர். 6 மாதங்களுக்கு முன்பு கருஞ்சிறுத்தை இப்பகுதியில் இருந்துதான் தலை, கால்கள் வெட்டப்பட்டு காண்டூர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் நடந்த நிலையில், வனப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியினை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் பணியில் மெத்தனமாக இருந்த காரணத்தினாலேயே மீண்டும் ஒரு சிறுத்தைப்புலி தலை, கால்களை வெட்டி கொல்லப்பட்டுள்ளது. முறையாக ஊதியம் வழங்காதது, அதிகாரிகள் தங்கள் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவது உள்ளிட்டவையே வேட்டைத் தடுப்பு காவலர்களை முறையாக பணியாற்ற முடியாமல் தடுத்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மலைவாழ் மக்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்திய பிறகுதான் முழு உண்மைகளும் வெளிவரும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்