ஈரோட்டில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-09-17 22:15 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், தொடர் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். அவருடைய உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கலைவாணி தலைமையில் அதிகாரிகள் வீரப்பன்சத்திரம் பெரியகுட்டை வீதியில் உள்ள ஒரு குடோனில் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினார்கள்.

அங்கு மளிகை பொருட்களுடன் கலந்து புகையிலை பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் வெளியே எடுத்து வந்தனர். இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 200 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து புகையிலை பொருட்களையும் அதிகாரிகள் மூட்டைகளில் கட்டி பறிமுதல் செய்தனர். மேலும், புகையிலை பொருட்கள் அடுக்கி வைத்திருந்த அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வீரப்பன்சத்திரம் திலகர் வீதியை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 46) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பரத் ஏஜென்சி நடத்தி வருவதும், அந்த ஏஜென்சி மூலமாக பல்வேறு கடைகளுக்கு மளிகை பொருட்களை மொத்த வியாபாரம் செய்வதும் தெரியவந்தது. மேலும், வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் அவர் மளிகை கடையும் நடத்தி வருகிறார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கலைவாணி கூறும்போது, ‘‘பரத் ஏஜென்சி நடத்தி வரும் பரமேஸ்வரன் வீரப்பன்சத்திரம் பெரியகுட்டை வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி மளிகை பொருட்களை வைத்து உள்ளார். அங்கிருந்து 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் கதிரவனின் உத்தரவின்பேரில் பரத் ஏஜென்சியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது’’, என்றார்.

மேலும் செய்திகள்