பல்லாவரத்தில் பரிதாபம்: லாரி மோதி அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் சாவு

பல்லாவரத்தில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-09-17 22:15 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்(வயது 72). டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த லாரி எதிர்பாராதவிதமாக ரத்தினத்தின் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து நிற்காமல் தறிகெட்டு வேகமாக சென்ற லாரி குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் ரேடியல் சாலை மேம்பாலம் அருகில் நடந்து சென்ற திருமுடிவாக்கத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் வரதன்(53) என்பவர் மீதும் மோதி விட்டு நின்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த ரத்தினத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதனையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்(45) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்