முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு: அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது

பெரியபாளையம் அருகே முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2018-09-17 22:30 GMT
பெரியபாளையம்,

பெரியபாளையம் அருகே உள்ள பெருமுடிவாக்கம் எம்.கே.பி. தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 45). இவர், பெருமுடிவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 15-ந்தேதி இரவு நடைபெற்ற ஊர்வலத்தில் மேளம் அடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மர்மநபர்கள், மின்சாரத்தை துண்டித்து, இருட்டை பயன்படுத்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான வெங்கடேசனை கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பஞ்செட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக பெருமுடிவாக்கம் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த அண்ணன்-தம்பிகளான பாஸ்கர்(23), பாபு(22) மற்றும் எம்.கே.பி.தெருவைச் சேர்ந்த சரவணன்(23), தேவா(24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்